வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமணக் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக, நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்த மனதின் குரல் நிகழ்ச்சி 100-வது எபிசோடை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று 107-வது எபிசோடு நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியர்களில் சிலர் தங்களது திருமணங்களை வெளிநாடுகளில் வைக்கின்றனர். இது தேவைதானா?
நமது நாட்டிலேயே திருமணத்தை வைத்துக் கொண்டால், இந்தியாவின் பணம் வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும். இது இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஆகவே, வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, திருமணத்திற்கான பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் இந்திய சந்தை மதிப்பில் 5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என்று வணிக அமைப்புகள் கணித்துள்ளன” என்று நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.