உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பிய காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் மீது கந்தர்பால் காவல்துறை உ.பா. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
இதனால், இந்திய அணியினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே கலங்கிப்போய் கண்ணீர் சிந்தினர். போட்டி நடைபெற்ற மைதானத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இந்திய அணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்கே சென்று ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், மத்திய காஷ்மீர் கந்தர்பாலின் ஷுஹாமாவில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததும், லோக்கல் மாணவர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பி இருக்கிறார்கள். மேலும், இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசிய மாணவர் ஒருவரை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள்.
இதையடுத்து, மேற்கண்ட மாணவர் கந்தர்பால் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில், காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்களை கந்தர்பால் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அம்மாணவர்கள் மீது உ.பா. சட்டம் பாய்ந்திருக்கிறது.
இதுகுறித்து கந்தர்பால் காவல்துறையினர் கூறுகையில், “இது பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புவது மட்டுமல்ல. முழக்கமிடப்பட்ட முழு சூழலைப் பற்றியது. இந்த முழக்கங்கள், ஒரு அசாதாரணத்தை இயல்பாக்குவது பற்றியது. இந்த அசாதாரணமான மற்றும் தவறான விஷயம் பெரும்பாலும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத வலைப்பின்னல்களின் பின்னணியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இது கருத்து வேறுபாடு அல்லது கருத்து சுதந்திரம் பற்றியது அல்ல. இதற்கு ஆதாரமாக எழுத்துப்பூர்வ புகார்கள் உள்ளன. மேலும், இது உ.பா. சட்டப் பிரிவு 13-ன் படி பிரிவினைவாத சித்தாந்தத்தை தூண்டுவது, ஆதரிப்பது மற்றும் ஊக்குவிப்பது பற்றியது. இது போன்ற செயல்களை சட்டவிரோதமானது என்று வகைப்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.