உத்தரகாசி சுரங்க இடிபாடுகளை சீர் செய்து உள்ளே சென்று தொழிலாளர்களை சந்தித்த போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் தங்களை தோளில் தூக்கி வைத்து கொண்டாடியதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்பதற்காக ஆகர் இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. ஆனால் திடீரென ஆகர் இயந்திரம் பழுதானதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகர் இயந்திரத்தின் சேதம் அடைந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது.
இறுதிக்கட்டத்தில் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற 12 பேர் கொண்ட குழுவினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் சுரங்கத்தினுள் சென்று இடிபாடுகளை அகற்றி உள்ளே சென்று தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை அடைந்தனர். அப்போது அவர்களை கட்டிப்பிடித்து கொண்டாடிய தொழிலாளர்கள் தோளில் தூக்கிவைத்து கொண்டாடினர்.
இதுதொடர்பாக அக்குழுவின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாங்கள் நவம்பர் 27 ஆம் தேதி மாலை 3 மணிக்குத் தொடங்கி நவம்பர் 28 மாலை 6 மணிக்கு பணியை முடித்தோம். 24 முதல் 36 மணி நேரத்தில் பணிகளை முடிக்க முடியும் என கூறியிருந்தோம். அதன்படி பணியை முடித்தோம். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக கட்டணம் எதுவும் வாங்கவில்லை.
இடிபாடுகளை அகற்றி கடைசிப் பகுதியை அடைந்தபோது தொழிலாளர்கள் பேசுவதை கேட்க முடிந்ததாகவும், உடனே எஞ்சிய இடிபாடுகளை அகற்றிவிட்டு மறுபக்கம் இறங்கியதாகவும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த குரேஷி என்பவர் தெரிவித்துள்ளார்.
எங்களை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள் நன்றி தெரிவித்ததுடன், கட்டிப்பிடித்து தோளில் தூக்கிக் கொண்டாடினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.