இந்தியாவைச் சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து 2024 இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அமெரிக்கா கூறியுள்ளது.
டில்லி வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், விஞ்ஞானிகளை சந்தித்தார். அப்போது, சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன் கூறியதாவது,
நிலவின் தெற்கு பகுதிக்கு பல செயற்கைக்கோள்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இருப்பினும், அந்த பகுதியில் முதலில் தரையிறங்கிய நாடு என்ற வகையில் இந்தியா பாராட்டுக்கு உரியது.
இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரருக்கு நன்கு பயிற்சி அளித்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார். வீரர் தேர்வை, இஸ்ரோ மேற்கொள்வதுடன், பயணம் தொடர்பான திட்டங்களையும் வடிவமைக்கும்.
2040க்குள் தனி விண்வெளி நிலையம் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு இந்தியா விரும்பினால், அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்.
இரு நாடுகளும் அறிவியலில் இணைந்து செயல்படுகின்றன. இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பான ‛நிசார்’ செயற்கைக்கோள்( Nasa-Isro Synthetic Aperture Radar- (NISAR)) அடுத்தாண்டு முதல் காலாண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
1 பில்லியன் டாலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், பூமி மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். நிலம், நீர் அல்லது பனிக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.