பழங்குடி சமூக சகோதரியை திமுக நிர்வாகி காலணியால் அடிக்கிறார், தொடர்ந்து மக்களுக்கு எதிரான போக்கையே திமுக மேற்கொள்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பட்டுக்கோட்டையில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
செழிப்பான விவசாய பூமியான பட்டுக்கோட்டை, முன்னாள் இந்திய ஜனாதிபதி R வெங்கட்ராமன் அவர்கள், புரட்சிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள், பட்டுக்கோட்டை ஐயா நாடி முத்துப்பிள்ளை, கார்கில் போரில் நாட்டைக் காக்க தன் உயிரைத் தியாகம் செய்த பள்ளிகொண்டான் மு.சக்திவேல் என நாட்டுக்காக வாழ்ந்த பலர் பிறந்த மண்.
தென்னை சாகுபடிக்குப் பெயர் போன பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில், 1.20 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொப்பரைத் தேங்காய் மற்றும் மட்டை உரித்த தேங்காய்க்குக் குறைந்தபட்ச ஆதார விலையை 100% க்கும் மேல் உயர்த்தியுள்ளார்.
ஆனால் திமுக, தேங்காய் விவசாயிகளுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் நேரடி கொள்முதல், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை உள்ளிட்டவற்றை இன்று வரை நிறைவேற்றாமல், தமிழக தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
பட்டுக்கோட்டை தொகுதி அதிராம்பட்டினம் பகுதியில், நாட்டுப்படகுகள் மூலமாக மீன்பிடி தொழிலில் 3500 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். பாரதப் பிரதமர் மோடி, மீனவர் நலனுக்காக முதல் முறையாக மத்திய அரசில் புதிய துறையை 2019 ஆம் ஆண்டு உருவாக்கி, மீன் விவசாயிகள் என்று பெருமைப்படுத்தினார்.
பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா திட்டம் மூலம் தமிழகத்தில் மீனவர்கள் நலனுக்காக, 2021 முதல் 2023 வரை ரூ.617 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் மத்ஸ்ய சம்பதா திட்டம் மூலம் 1356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 1,84,457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,42,458 மீன் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது மீனவர்கள் நலனுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிறைவேற்றிய திட்டங்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டம், குழாய் மூலம் குடிநீர், இலவச கழிப்பறைகள், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, பிரதமரின் மருத்துவ காப்பீடு, விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், முத்ரா கடன் உதவி என தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்கள் பல லட்சம் பேர்.
ஆனால் திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விடுவிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை காவல்துறை அதிகாரியை வலியுறுத்துகிறார்.
அமலாக்கத்துறை, நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திமுக ஆட்சிக்கு வந்தபின் ரூ.4,700 கோடி மதிப்பில் மணல் கொள்ளை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அதிராம்பட்டினத்தில் மக்களுக்கு உதவிகள் செய்ய முன்வந்த தொண்டு நிறுவனத்தை திமுகவினர் மிரட்டி உள்ளார்கள். பத்திரிக்கையாளர்களை மிரட்டுகிறார்கள். பழங்குடி சமூக சகோதரியை திமுக நிர்வாகி காலணியால் அடிக்கிறார். தொடர்ந்து மக்களுக்கு எதிரான போக்கையே திமுக மேற்கொள்கிறது.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம், பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டுத் தரம் உயர்த்துதல், பட்டுக்கோட்டை வேப்பங்குளத்தில் உள்ள தென்னை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கான முழுநேரப் பயிற்சி மையம், பேராவூரணி கூட்டுக் குடிநீர் திட்டம் பட்டுக்கோட்டை வரை விரிவுப்படுத்தல், அதிராம்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க நடவடிக்கை, அதிராம்பட்டினத்தில் தேங்காய் கொள்முதல் மையம் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், விவசாயிகளுக்கு எதிரான மக்கள் விரோத திமுக, தமிழகம் முழுவதுமே முழுமையாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்கள் தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.