தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் டிசம்பர் 2 -ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்றும், இதனால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் வேளச்சேரி, மண்ணடி, ராயபுரம், காசிமேடு, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விமான நிலையத்தை சுற்றிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது.
கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 15 விமானங்கள் காலத் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்களும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் அவதியடைந்துள்ளனர். சேலம், ஆந்திரா, அபுதாபி, இலங்கை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.