பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டி, தீவுத்திடல் மைதானம் அருகே 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவு போட்டியாக நடைபெறுகிறது. தீவுத்திடலிலிருந்து ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலில் நிறைவு பெறுகிறது. இதற்கு தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தெடார்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் போட்டியை நடத்தாத போது, தனியார் அமைப்பு நடத்தும் போட்டிக்கு இவ்வளவு நிதி ஏன் ஒதுக்கப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அப்போது, ஐபிஎல் போட்டி நடத்தப்படும் நடைமுறையில் தான் இந்த கார் பந்தயமும் நடத்தப்படுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்தது.இதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் திங்கள் கிழமை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.