பருவநிலை உச்சி மாநாட்டினை 2028ம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.
ஐ.நா பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், 2028ஆம் ஆண்டு பருவநிலை உச்சி மாநாட்டை இந்தியா நடத்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை உலகிற்கு இந்தியா முன்வைத்துள்ளது என்று வலியுறுத்திய பிரதமர், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு அல்லது தேசிய செயல் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் பாதையில் உள்ள உலகின் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றார்.
கடந்த நூற்றாண்டில், மனிதகுலத்தின் ஒரு சிறிய பகுதி கண்மூடித்தனமாக இயற்கையை சுரண்டியுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த மனிதகுலமும் இதற்கான விலையை செலுத்துகிறது, குறிப்பாக உலகளாவிய தெற்கில் வாழும் மக்கள்,” என்று அவர் கூறினார்.
“நம்முடைய சொந்த நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பது உலகை இருளில் இட்டுச் செல்லும்,” என்று பிரதமர் மேலும் கூறினார். கடந்த நூற்றாண்டின் தவறுகளை சரி செய்ய உலகிற்கு அதிக நேரம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
பணக்கார நாடுகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கார்பன் உமிழ்வுகளால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் விளைவாக வெள்ளம், வறட்சி, வெப்பம்/குளிர் அலைகள் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளின் சுமைகளை ஏழை மற்றும் வளரும் நாடுகள் தாங்குகின்றன என்ற சூழலில் பிரதமர் மோடியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.