ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) பெரும்பான்மை பள்ளத்தாக்கிலிருந்து அகற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என்று மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ள மணிப்பூரில் மிகவும் பழமையான ஆயுதக் குழுவான (UNLF) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற ஆயுதக்குழு இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்ற புதன் கிழமை மத்திய அரசுக்கும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆரம்பம் இருந்தால் முடிவும் இருக்க வேண்டும். மோதல் என்றால் அரசியல் தீர்வும் இருக்க வேண்டும். ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி உடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி .
அதனால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அமைதியின் புதிய அத்தியாயம், இயல்பு நிலை மணிப்பூரில் தொடங்குகிறது. மணிப்பூர் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிப்பூரில் 99 சதவீத மக்கள் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள். மீதமுள்ள ஒரு சதவீத மக்களும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியும் இந்த மாநிலத்தில் அமைதி நிலவ பணியாற்றுமாறு வேண்டுகின்றேன் .
சட்டவிரோத ஊடுருவல் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை பாஜ., அரசு மேற்கொண்டு உள்ளது. மாநிலத்தின் பழங்குடி மக்களைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) பெரும்பான்மை பள்ளத்தாக்கிலிருந்து அகற்ற பாஜ., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்