செங்கல்பட்டில் நேற்று இரவு பெய்த கனமழையால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். குண்டும், குழியுமான சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்ததால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட, பயிர்கள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.