தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்வர் என எதிர்பார்க்கப்படும் ரேவந்த் ரெட்டி கடந்து வந்த பாதையை காணலாம்.
கடந்த 1969ஆம் ஆண்டு மெக்பூப்நகர் மாவட்டம் கொண்டாரெட்டிபள்ளி கிராமத்தில் பிறந்த ரேவந்த் ரெட்டி மாணவராக இருந்தபோது ஏபிவிபியில் உறுப்பினராக இருந்தார்.
2006 இல், அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, சுயேச்சை வேட்பாளராக மிட்ஜில் மண்டலத்திலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007 இல், ரேவ்ந் ரெட்டி சுயேட்சை வேட்பாளராக சட்ட மேலவை உறுப்பினராக (MLC) தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
2009ஆம் ஆண்டு ரேவந்த் ரெட்டி ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு கோடங்கல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காங்கிரஸின் (INC) தற்போதைய மற்றும் ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்த குருநாத் ரெட்டியை எதிர்த்து வெற்றி பெற்றார்.
2014 ஆம் ஆண்டு கோடங்கலில் இருந்து ரேவந்த் ரெட்டி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக கோடங்கலில் போட்டியிட்டு, டிஆர்எஸ் வேட்பாளர் பட்னம் நரேந்தர் ரெட்டியிடம் ரேவந்த் ரெட்டி தோல்வியடைந்தார், இது அவரது முதல் தோல்வி.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (TPCC) மூன்று செயல் தலைவர்களில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டார்.
2019 மக்களவை பொதுத் தேர்தலில் மல்காஜ்கிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார்.
ஜூன் 2021 இல், உத்தம் குமார் ரெட்டிக்கு பதிலாக தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ரேவந்த் ரெட்டி நியமிக்கப்பட்டார்.
2023இல் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டார். மற்றொரு தொகுதியான காமரெட்டி தொகுதியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை எதிர்த்து அவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.