மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். மேலும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது, மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும். மேலும் இந்த புயல் வருகிற 4-ஆம் தேதி மாலை நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொலைப் பேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனிடம் பேசினார். மாநிலத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனத் பிரதமர் மோடி உறுதியளித்தார்.