ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், ஜாதி ரீதியான அரசியலால் மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
அதேசமயம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “பிரதமர் மோடி மீது நாடு நம்பிக்கை வைத்திருக்கிறது.
ஒரே ஒரு உத்தரவாதம் மட்டுமே செயல்படுகிறது என்பதை அனைத்து மாநிலங்களும் காட்டி இருக்கின்றன. அதுதான் மோடியின் உத்தரவாதம். அதேசமயம், காங்கிரஸின் உத்தரவாதங்கள் தோல்வியடைந்தன. மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தை நிராகரித்து விட்டனர்.
ஜாதி ரீதியான அரசியல் செய்தால் ஒரே ஒரு பதில்தான் என்று மக்கள் காங்கிரஸுக்குக் காட்டி இருக்கிறார்கள். நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். அதோடு, ராஜஸ்தானில் நடந்த ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால், பெண்கள் காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்தார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்க்கட்சிகள் எவ்வளவு அதிகமாக பிரதமர் மோடியின் இமேஜை இழிவுபடுத்த முயன்றார்களோ, அவ்வளவு அதிகமாக பிரதமர் மோடி வளர்ந்தார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் மட்டுமே இந்தியாவில் உள்ள ஜாதிகள்.
மத்தியப் பிரதேச தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடியின் தலைமையை பாராட்டுகிறேன். இது கட்சித் தொண்டர்களின் வெற்றி. பிரதமர் மோடியின் புகழும், மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களும் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்திருக்கிறது” என்றார்.