மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த கனமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் குடும்பத்தினரைப் படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி தொண்டர்கள் களமிறங்கி உள்ளனர்.
மிக்ஜாம் புயல் 5-ஆம் தேதி ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதனால், கடந்த 4-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சென்னையில் வெள்ளத்தால் தத்தளித்த குடும்பங்களைப் படகில் சென்று மீட்டெடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்.
கடந்த 5-ஆம் தேதி இரவு சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வயதான நோய்வாய்ப்பட்டவரைப் படகில் மீட்டு வந்தனர் ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி தொண்டர்கள். மேலும், நேற்றிரவு துரைப்பாக்கம் பகுதியில் மட்டும் எட்டு குடும்பங்களை மீட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.