மிக்ஜாம் புயல் எதிரொலியாக, சென்னையில் பெருமழை வெளுத்து வாங்கியது. இரண்டு நாட்களுக்கு மேலாக, வரலாறு காணாத விடியவிடிய பெய்த தொடர் பெருமழை பெருமழையால் சென்னையின், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், வட சென்னை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பெரும்பாலான இடங்கள் மழைவெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
ராயபுரம், திருவல்லிக்கேணி, தி நகர் போன்ற நகரின் பிரதான பகுதிகளில் நீர் வடிந்தும், குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் நீர் தேங்கி உள்ளது.
பல்வேறு இடங்களில் இன்னும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படவில்லை. இதில், திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ் அவுஸ் நடேசன் சாலையில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இது அமைச்சர் உதயநிதி தொகுதி என்பதால், முதலில் உதயநிதிக்கும் அடுத்து, வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், இது தொடர்பாக யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனால், வெகுண்டெழுத்த பொது மக்கள் அப்பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி வருகின்றனர். ஆனால், பொது மக்கள் சமாதானம் ஆகவில்லை. போராட்டம் தொடர்கிறது.