வேளாண் துறையை நவீனமயமாக்குவதற்காக கென்யா நாட்டுக்கு இந்தியா சாா்பில் 2,084 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கென்யா. இந்நாட்டின் அதிபா் வில்லியம் சமோய் ருடோ, 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அதிபர் ருடோவின் முதல் இந்திய வருகை இது. அதோடு, கடந்த 6 ஆண்டுகளில் கென்ய அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கள்கிழமை டெல்லியை வந்தடைந்த அவரை முக்கிய உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து, கென்ய அதிபர் ருடோ, பாரதப் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினாா்.
இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமா் மோடி, “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு எப்போதும் உயா் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்துடனான தனது உறவுகளை விரிவுபடுத்தி இருக்கிறது.
இரு நாடுகளும் வேளாண் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், கென்யாவில் வேளாண் துறையை நவீனமயமாக்க 2,084 கோடி ரூபாய் கடனுதவியை இந்தியா வழங்கவிருக்கிறது. மேலும், மனித குலம் எதிா்கொண்டுள்ள மிகத் தீவிரமான சவால் பயங்கரவாதம் என்பதில் இந்தியாவும் கென்யாவும் ஒரே பாா்வையைக் கொண்டுள்ளன. எனவே, பயங்கரவாதத்தைத் தடுப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.
இப்பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளின் பாதுகாப்பு உற்பத்தித் தொழில் துறையை ஒருங்கிணைப்பதோடு, கூட்டு இராணுவப் பயிற்சிகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கென்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுமாா் 80,000 போ், அந்நாட்டை தங்களது 2-வது வீடாகக் கருதுகின்றனர். ஆகவே, இருதரப்பு உறவின் மிகப் பெரிய வலிமையாக அவர்கள் திகழ்கின்றனா்” என்றார்.
பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இந்தியா – கென்யா இடையே பாதுகாப்பு, வா்த்தகம், எரிசக்தி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. மேலும், கென்யாவில் சிறுதானியங்களை விளைவிக்கும் வகையில், அந்நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு இந்திய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், இந்தியாவின் கடனுதவிக்காக கென்யா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.