சென்னையில் 15 ஆண்டுகளாக மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளதாகவும், வெள்ள பிரச்சனைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண முடியும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரனை மற்றும் வட சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான உணவு, தண்ணீர், பால் போன்றவை கிடைக்காமல் அவதி அடையும் நிலையும் உள்ளது.
இந்தநிலையில் வேளச்சேரி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். தொடர்ந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அண்ணாமலை வழங்கினார்.
இதனை தொடர்ந்து சென்னை மாதவரம் பகுதியில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகளுடன், நமது மாநிலத் தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
சென்னையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மக்களுக்கான அடிப்படை தேவையாக தண்ணீர் தான் உள்ளது. சென்னையில் தேங்கிய மழை நீரில் கிட்டத்தட்ட 70% வடிந்துவிட்டது.
இன்னும் 30% தான் மழை நீர் தேங்கியுள்ளது. நாளைக்குள் அதுவும் மீண்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டித்து வைத்துள்ளனர். எனவே இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இந்த நேரத்தில் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும்.
கடந்த 4 நாட்களாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், முன் களப்பணியாளர்களும் தொடர்ந்து களத்தில் இருக்கிறார்கள்.
சென்னை மக்கள் அதிகாரிகளை நம்புகிறார்கள் ஆனால் அரசியல்வாதிகளை நம்ப தயாராக இல்லை. எனவே அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். திட்டங்களை சரியான முறையில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
15 ஆண்டுகளாக சென்னையில் மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.