சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். இவர்களுக்கு மாநில சட்டமன்றத்தில் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இத்தேர்தல்களில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் போட்டியிட்டனர்.
இந்த சூழலில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இம்மாநிலத் தேர்தல்களில் போட்டியிட்ட பா.ஜ.க. மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வெற்றி பெற்றவர்களில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போட்டியிட்ட மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ஆகியோரும் அடங்குவர். இதையடுத்து, இருவரும் நேற்று நாடாளுமன்றத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
அதேபோல, வெற்றிபெற்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங், ரித்தி பதக், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சத்தீஸ்கரைச் சேர்ந்த கோமதி சாய், அருண் சாவ் ஆகியோரும் நேற்று தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, மேற்கண்ட 12 எம்.பி.க்களும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஆசிபெற்றனர். பின்னர், தங்களது ராஜினாமா கடிதங்களை மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோரிடம் அளித்தனர்.
இதனிடையே, கிரோடி லால் மீனா ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்திருக்கிறார்.