தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மழை உள்ளிட்ட எந்தப் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வைிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை,
தமிழக மக்களுக்கு என்னவெல்லாம் மத்திய அரசு உதவிகளை செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்தோம். நேற்று 5060 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். 24 மணி நேரத்திற்குள், ராஜ்நாத் சிங், எல்.முருகனை தனது பிரதிநிதிகளாக தமிழகத்திற்கு பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளார்.
தமிழக மக்களுடன் பிரதமர் இருக்கிறார் என்பதற்கு இதனை விட சான்று தேவையில்லை. அம்ரூத் திட்டத்தின் கீழ், 4397 கோடி ரூபாய் சென்னைக்கு 7 ஆண்டுகளில் மோடி அளித்துள்ளார்.
தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட எங்கு மழை உள்ளிட்ட காரணங்களினால் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது. வேகமாக செயல்படுகிறது.
திமுக கவுன்சிலர்கள், எம்பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்களை எங்கும் பார்க்க முடியவில்லை. ஆளுங்கட்சியினர் களத்திற்கு வர வேண்டும். மக்கள் கோபப்பட தான் செய்வார்கள். கோபத்தில் உள்ளனர். எல்லா இடத்திலும் பாஜக நிர்வாகிகள், மக்களோடு, மக்களாக களப்பணியாற்றி வருகின்றனர். சென்னையில் மழைநீர் வடிகால் 100 சதவீதம் வேலை செய்யவில்லை. திருபுகழ் கமிட்டி ரிப்போர் என்னாச்சு எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் மழைவெள்ள பாதிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது எனத் தெரிவித்தார்.