எங்கு ஓடி ஒளிந்தாலும் ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவி கண்ணில் கண்டவர்கள் அனைவரையும் சுட்டுக் கொலை செய்தனர்.
மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் இதுவரை காஸா நகரைச் சேர்ந்த 16,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 35,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், பதுங்குக் குழிகள், சுரங்கப்பாதைகள் உட்பட சுமார் 2,000 இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், படைத் தளபதிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோரை பழிதீர்த்திருக்கிறது.
இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த மாதம் 6 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. எனினும், பிணைக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், இஸ்ரேல் இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாரைப் பிடிக்கப்போவது உறுதி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹமாஸ் தலைவர் இருப்பதாக நம்பப்படும் காஸாவின் தெற்குப் பகுதிகளைச் சுற்றி இஸ்ரேலின் படை வளைத்து விட்டது.
இஸ்ரேல் படையினர் தற்போது சின்வாரின் வீட்டைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள். எனினும், அங்கிருந்து அவர் எளிதாகத் தப்பி ஓடிவிடுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், விரைவில் அவரைப் பிடிக்கப்போவது உறுதி. அதேசமயம், காஸாவில் இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செஞ்சிலுவை அமைப்பினர் செய்து தர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.