இந்து சமூக மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் திமுகவுக்கு சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்து மதம் பிடிக்காதவர்கள் வேறு மதத்திற்கு சென்று விட வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மக்களவையில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் பங்கேற்று பேசினார். அப்போது, இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் பொதுவாக ’கோ மூத்திர மாநிலங்கள்’ (கௌமுத்ரா) என்று அழைப்போம். அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிடைக்கிறது என தெரிவித்தார்.
இதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். வட மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதால் செந்தில்குமார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஐ.பி.சிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முஸ்லீம் சமூகம் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்து தனது மதத்தைப் பாதுகாப்பதால் இஸ்லாத்தை அவமதிக்க மக்கள் துணிவதில்லை. அதே நேரத்தில், ஒரு சில பைத்தியக்கார இந்துக்கள் நம் தெய்வங்கள், மத நூல்கள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை கேலி செய்கிறார்கள்.
எங்கள் நம்பிக்கையை அவமதிக்கும் திமுக தலைவர்கள் இந்து மதத்தை கண்டித்திருந்தால் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அவர்கள் கிறிஸ்தவத்தை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்டால், இந்து மதத்தை எப்படி விமர்சிக்க முடியும்?
இந்து மதத்தை விரும்பாதவர்கள் வேறு எந்த மதத்தையோ ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இதுபோன்ற விமர்சனங்களை நிறுத்த வேண்டும். இதைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும், இல்லையெனில் இந்து மதத்தின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.