அஸ்ஸாம் மாநிலத்தில் 1966 ஜனவரி 1-ம் தேதி முதல் 1971 மாா்ச் 25-ம் தேதி வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிசம்பர் 11-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது, வங்கேதசத்திலிருந்து வெளியேறிய மக்கள் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்தனா். இதனால், அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதையடுத்து, வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, அவா்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடா்பாக அனைத்து அஸ்ஸாம் மாணவா்கள் சங்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அஸ்ஸாம் உடன்பாட்டை கடந்த 1985-ம் ஆண்டு மேற்கொண்டன.
அதன்படி, 1971 மாா்ச் 25-ம் தேதிக்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் குடியேறியவா்களுக்கு குடியுரிமை வழங்கும் பிரிவு 6ஏ குடியுரிமைச் சட்டத்தில் சோ்க்கப்பட்டது.
ஆனால், அஸ்ஸாம் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினரால், மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு மற்றும் கலாச்சாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ-ன் செல்லுப்படித் தன்மையை ஆராயுமாறும் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையில், 1971 மாா்ச் 26-ம் தேதிக்குப் பிறகு அஸ்ஸாம் தவிர, எல்லையில் உள்ள பிற மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை, மத்திய அரசு ஏற்படுத்தி உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் அரசியல் சாசன அமா்வு கோரியிருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் வங்கதேச எல்லையில் வேலி அமைக்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.