2024, பிப்ரவரி 26 முதல் 29 வரை பாரத் டெக்ஸ் 2024 என்ற உலக மகா ஜவுளி நிகழ்வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று 2024, பிப்ரவரி 26 முதல் 29 வரை பாரத் டெக்ஸ் 2024 என்ற உலக மகா ஜவுளி நிகழ்வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது என மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.
பாரத் டெக்ஸ் 2024 என்பது 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பு மற்றும் ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படும் உலக மகா ஜவுளி நிகழ்வாகும். இதை 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை புதுதில்லியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இது நிலைத்தன்மை, மறுசுழற்சி குறித்த சிறப்பு அரங்குகள், நெகிழ்வான உலகளாவிய விநியோக அமைப்புகள், டிஜிட்டல்மயமாக்கல் குறித்த கருப்பொருள் விவாதங்கள், கைவினைஞர்களின் தயாரிப்பு செயல்விளக்கங்கள், சர்வதேச வடிவமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்.
சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தரைத்தளம், இழைகள், நூல், துணிகள், தரைவிரிப்புகள், கம்பளங்கள், பட்டு, ஜவுளி சார்ந்த கைவினைப் பொருட்கள், தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் பல கண்காட்சிகள் நடைபெற உள்ளன. இது சுமார் 50 அமர்வுகளைக் கொண்டிருக்கும்.