கர்நாடக சட்டப்பேரவையில் இந்து சிந்தனையாளர் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை என்று கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகர் யு.டி காதர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, இந்து சிந்தனையாளர் சாவர்க்கரின் படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா, சட்டப் பேரவையில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கரின் படத்தை அகற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா பேசுகையில், “நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சாவர்க்கரின் படத்தை அகற்றும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது படத்தை சட்டசபையில் இருந்து அகற்ற அனுமதிக்க மாட்டோம். அதை நீக்கினால், காங்கிரஸ் அரசு மோசமான விளைவுகளை சந்திக்கும்,” என்றார்.
முதல்வர் சித்தராமையா விளக்கம்: இதற்குப் பிறகு, முதல்வர் சித்தராமையா கூறுகையில், “சவர்க்கர் பட விவகாரத்தில் பேரவைத் தலைவர் யுடி காதர் முடிவெடுப்பார்,” என்றார். அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றார்.
இது குறித்து நேற்று யூடி காதரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “சாவர்க்கரின் படத்தை நீக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பா.ஜ.,வின் கடும் எதிர்ப்பு காரணமாக, காங்கிரஸ் அரசு பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.