ஏழைகளின் நலனை காக்கும் அரசாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திகழ்கிறது என்று தகவல் ஒலிபரப்புத்துறை இணயைமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், காரமடையில் நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையை தகவல் ஒலிபரப்புத்துறை இணயைமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தபால்துறை மூலம், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான அட்டைகள் வழங்கப்பட்டன. வேளாண் அறிவியல் மையம் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன. கனரா வங்கி சார்பில் மாடு வளர்க்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியிலும் மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார்.
கூட்டத்தில் உரையாற்றிய எல். முருகன்,
நாட்டில் உணவின்றி ஒரு ஏழை கூட உறங்கக்கூடாது என்பதற்காக இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டோர் மாதத்திற்கு 5 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு போன்றவற்றை இலவசமாக பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் இந்த திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்து வருவதாக குறிப்பிட்டார்.
மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை, பொதுமக்களிடையே எடுத்துச் சொல்லும் நோக்கில் இந்த யாத்திரை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
நாடுமுழுவதும் 3 ஆயிரம் வாகனங்கள் மூலம் இந்த யாத்திரை நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாட்டில் 111 வாகனங்கள் யாத்திரையில் பங்கேற்றுள்ளதாக கூறினார். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் இதுவரை பயனடையாமல் விடுபட்டவர்களுக்கு இந்த யாத்திரையின் மூலம், அந்த திட்டத்தின் பலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான உத்திரவாதமாக இந்த யாத்திரை நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்..
பிரதமர் நரேந்திர மோடி, பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்றவை மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.
பெண் குழந்தைகள் உயர்கல்வியை தொடர்வதை, செல்வமகள் சேமிப்புத் திட்டம் உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தார்.
பிரதமர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கைத்தறித் துறை வளர்ச்சி கண்டிருப்பதாக தெரிவித்தார்.
குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம், தூய்மையான குடிநீர், ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்திருப்பதாக தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஏழை மக்கள் உயரிய மருத்துவ சிகிச்சை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். உலக நாடுகளின் தலைவராக பிரதமர் திரு. நரேந்திர மோடி உருவெடுத்திருப்பதாக தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் வரவேற்பை வியப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். உலகின் சக்திவாய்ந்த தலைவராக நரேந்திர மோடி திகழ்கிறார் என்று தெரிவித்தார்.
பல்வேறு கடனுதவித் திட்டங்கள் மூலம், தொழில்துறை வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நடைபாதை வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்திலிருந்து, முத்ரா கடனுதவி திட்டம் வரை தொழில் புரிவதற்காக கடனுதவிகள் வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற பிரதமரின் அழைப்பு மக்கள் இயக்கமாக உருவெடுத்திருப்பதாக தெரிவித்தார்.