நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழையும், பெண்களும், விவசாயிகளும், இளைஞர்களும்தான் எனக்கு வி.ஐ.பி.க்கள் என்று பாரதப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகையில், “ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தல் முடிவுகள் மோடியின் உத்தரவாதத்தை மக்கள் நம்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
பொய்யான வாக்குறுதிகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதை சில அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் கருத்துக் கணிப்புகளை வெல்ல முடியாது. மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு, மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். மக்களை குறைத்து மதிப்பிடக்கூடாது.
சில அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயங்களைப் பற்றி சிந்திக்காமல், மக்களுக்கு சேவை செய்வதில் முன்னுரிமை அளித்திருந்தால், நமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இன்று இவ்வளவு சிரமங்கள், பற்றாக்குறை மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.
பல தசாப்தங்களாக அரசை நடத்தியவர்கள் நேர்மையாக உழைத்திருந்தால், நான் அளித்த உத்தரவாதங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்கும். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் நமது அரசின் ஏதாவது ஒரு திட்டத்தால் நிச்சயமாக பயனடைந்துள்ளனர்.
நாட்டின் ஒவ்வொரு ஏழையும், பெண்களும், விவசாயிகளும், இளைஞர்களும் எனக்கு வி.ஐ.பி.க்கள்தான். இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தில் சுமார் 1 லட்சம் புதிய பயனாளிகள் பலனடைந்திருக்கிறார்கள். ஒருவர் பலன் பெறும்போது, ஒருவரின் நம்பிக்கை அதிகரிக்கிறது. அவர்கள் வாழ்வதற்கான புதிய பலத்தைப் பெறுகிறார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.