சத்தீஸ்கரில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இதன் முடிவில் முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே, மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடந்தது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிட்டப்பட்டது. இதில், ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்விடைந்தது. அதேசமயம், பா.ஜ.க. 54 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது.
ஆனால், முதல்வரை தேர்வு செய்வதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கிடையே குழப்பம் நிலவி வருகிறது. ஏற்கெனவே, 3 முறை முதல்வராக இருந்த ராமன் சிங், முதல்வர் ரேஸில் முன்னிலையில் இருந்தாலும், அவருக்கு வயதாகி விட்டதால், புதுமுகத்திற்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரையோ அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரையோ முதல்வராக நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் நிலவுவதற்கான காரணம் என்கிறார்கள்.
இதையடுத்து, முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய பழங்குடியின விவகாரத் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில், சர்பானந்த சோனவால், பா.ஜ.க. பொதுச்செயலர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் அடங்கிய மேற்பார்வையாளர்கள் குழுவை பா.ஜ.க. மேலிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நியமித்தது.
இக்குழுவினர் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைந்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, தலைநகர் ராய்ப்பூரில் மாநில சட்டமன்றத்து்ககு புதிதாக தேர்வாகி இருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் புதிய முதல்வர் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. இதன் பிறகு, சத்தீஸ்கரின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.