காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில எம்.பி. அலுவலகத்தில் இருந்து 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் ராகுலும், சோனியா காந்தியும் மௌனம் காப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தீரஜ் சாஹூ. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இவருக்குச் சொந்தமாக ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த மதுபானத் தொழிற்சாலைகளில் கடந்த 6-ம் தேதி முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இச்சோதனையில் இதுவரை 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 4 நாட்களாகியும் பணம் எண்ணும் பணி இன்னும் நிறைவடையவில்லை.
நாட்டில் கைப்பற்றப்பட்டதில், இதுதான் மிகப்பெரிய கருப்புப் பணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மேற்கு டெல்லி எம்.பி. பர்வேஷ் வர்மா, டெல்லி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி, எம்.எல்.ஏ. விஜேந்திர குப்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியுடன் தீரஜ் சாஹு கலந்துகொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க.வின் அமித் மாளவியா, “உண்மையில் இந்த யாத்திரை நாட்டின் திருடர்களை ஒன்றிணைப்பதற்காகவே” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருமான கிஷன் ரெட்டி, “ராகுலின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து, சுமார் 300 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றி இருக்கிறது.
தீரஜ் சாஹூவுக்கு எதிரான வருமான வரித்துறை சோதனைகள் குறித்து, ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் எதுவும் கேட்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். இதைப் பற்றி ராகுல் ஏன் சமூக வலைதளங்களில் எதுவும் பதிவிடவில்லை? ஏனென்றால் காங்கிரஸ் எப்போதும் ஊழலை ஆதரிக்கிறது. நீங்கள் எப்போதும் வருமான வரித்துறையை விமர்சிக்கிறீர்கள். ஆனால், இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.