திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மேற்கு கோபுர வாசல் வழியாக, டிப்பர் லாரியை ஓட்டிச்செல்ல முயன்ற சம்பவம், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில், ஆழ்வார்களால் ‘மங்களாசாசனம்’ செய்யப்பட்ட பழமையான திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் ராஜகோபுரம் உட்பட வெள்ளை கோபுரம், வடக்கு மற்றும் மேற்கு கோபுர வாயில்களுடன் அமைந்த ரங்கநாதர் கோவிலில், தாயார் சன்னதி உட்பட பல்வேறு சன்னதிகளுக்கும் தனித்தனி கோபுரங்கள் உள்ளன.
மேலும், சித்திர வீதிகள் மற்றும் உத்திர வீதிகளில் நுழைவு வாயில் கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் அனைத்திலும், சுதை சிற்பங்களும், கல்தூண்களில் புடைப்பு சிற்பங்களும் உள்ளன. பழமையான இந்த கோவிலுக்கு, யுனெஸ்கோ சார்பில், புராதன அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. வருகிற 23-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி, கோவிலின் மேற்கு கோபுரவாசல் வழியாக, டிப்பர் லாரியை ஓட்டிச் செல்ல முயன்றனர். லாரியின் அகலம் பெரியதாக இருந்ததால், அந்த வாசல் வழியாக செல்ல முடியவில்லை.
இதனால், லாரியை பின்னோக்கி எடுத்து சென்றனர். ஆனால், டிப்பர் லாரி சிக்கிக் கொண்டதால், மேற்கு கோபுர வாசலிலிருந்த சிற்பங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.