சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், பா.ஜ.க. 54 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், முதல்வர் யார் என்பதில் குழப்பம் நிலவியது.
இம்மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்த ராமன் சிங், மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால், முதல்வரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய பழங்குடி இனத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் மத்திய பார்வையாளர்கள் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் இன்று சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தி விவாதித்தனர்.
இக்கூட்டத்தின் முடிவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார். இவர், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வடக்கு சத்தீஸ்கரின் குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சாய், பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்பில் இருப்பதோடு, மாநில முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்திருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க், ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமான மக்கள்தொகை கொண்ட செல்வாக்கு மிக்க சாஹு (தெலி) சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவர் 2020 முதல் 2022 வரை சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. தலைவராகப் பணியாற்றியவர். பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் சுரங்கங்கள் மற்றும் எஃகுத் துறைக்கான மத்திய அமைச்சராக இருந்தார். பழங்குடியின வாக்காளர்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படும் நபராக சாய் இருந்து வருகிறார்.
முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான ரேணுகா சிங் சருதா கூறுகையில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் விஷ்ணு தியோ சாய் முதல்வராக பதவியேற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை” என்று கூறியிருக்கிறார்.