சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார்.
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 54 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து, மாநில முதல்வரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. இதற்காக, மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவினர் இன்று சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களைக் கூட்டி விவாதித்தனர். அப்போது, சட்டமன்றக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். இதைத் தொடர்ந்து, விஷ்ணு தியோ சாய் விரைவில் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கரின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து விஷ்ணு தியோ சாய் கூறுகையில், “இன்று நான் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நம்பிக்கை காட்டிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி.
முதலமைச்சராக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எனது முன்னுரிமை. கடந்த 5 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவதிப்பட்டனர். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதுதான் முதல்கடமை.
டிசம்பர் மாதம் 25-ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, விவசாயிகளுக்கு 2 ஆண்டுகள் போனஸ் வழங்கப்படும். பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் படி, அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்” என்றார்.
விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவரது தாயார் ஜஸ்மணி தேவி கூறுகையில், “சத்தீஸ்கர் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனது மகனுக்குக் கிடைத்திருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.