73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்றுபஞ்சாபில் லூதியானாவில் உள்ள குருநானக் தேவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் இந்தியன் ரயில்வே ஆகிய அணிகளும், பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியன் ரயில்வே மற்றும் கேரளா அணிகளும் விளையாடின.
கடந்து ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற தமிழக அணி பட்டத்தைத் தவறவிட்டது. அதனால் இந்த முறை இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 72-67 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழக அணி சார்பில் பால்தனேஸ்வர் 17 புள்ளிகளும், பிரணவ் பிரின்ஸ், ஜீவந்தன் தலா 11 புள்ளிகளும், அரவிந்த் 10 புள்ளிகளையும் பெற்றனர். பஞ்சாப் அணி சார்பில் பால்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 23 புள்ளிகளையும், கல்யாண் மற்றும் மாணிக் ஆகியோர் தலா 13 புள்ளிகளையும் பெற்றனர்.
அதேபோல் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் ரயில்வே அணி, கேரளா மகளிர் அணியை 80-50 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்தியன் ரயில்வே மகளிர் அணி சார்பில் பூனம் சதுர்வேதி 23 புள்ளிகளையும், புஷ்பா செந்தில் குமார் 15 புள்ளிகளும், குலாப்ஷா அலி 11 புள்ளிகளையும் பெற்றனர். கேரளா அணியில் அனீஷா கிளீடஸ் 15 புள்ளிகளையும், சூசன் டிலோரன்டீனா மற்றும் ஸ்ரீகலா தலா 10 புள்ளிகளையும் பெற்றனர்.
இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக ஆண்கள் அணியின் பல்தனேஸ்வர் மற்றும் இந்திய ரயில்வேவின் பூனம் சதுர்வேதி ஆகியோர்க்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.