மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வா்கள் இன்று பதவியேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
ஆனால், 3 மாநில முதல்வர்கள் யார் என்பதில் குழப்பம் நிலவியது. ஏற்கெனவே மாநில முதல்வர்களாக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே சிந்தியா, ராமன் சிங் ஆகியோர் மீண்டும் முதல்வர் பதவியை எதிர்பார்த்துக் காந்திருந்தார்கள்.
அதேசமயம், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருந்தது. எனவே, முதல்வர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, 3 மாநிலங்களின் முதல்வர்களைத் தேர்வு செய்ய மத்தியப் பார்வையாளர்களை பா.ஜ.க. தலைமை நியமித்தது.
அதன்படி, மத்திய பழங்குடியின அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது. இதில், அம்மாநில முதல்வர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறுநாள், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர். இக்கூட்டத்தில், சிவராஜ் சிங் சௌஹான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் நேற்று ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர். இதில், பஜன் லால் ஷர்மா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மோகன் யாதவ் மற்றும் விஷ்ணு தியோ சாய் ஆகியோர் இன்று முதல்வர்களாகப் பதவியேற்கிறார்கள். இதையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலைநகா் போபாலில் உள்ள லால் பரேடு மைதானத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைநகா் ராய்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாக்களில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.