2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் “மிஷன் 2024” என்கிற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறார்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மிஷன் 2024” என்கிற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறார். 2 நாள் பயணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, பிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மேலும், காசி தமிழ்ச் சங்கமம் 2-ம் கட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தவிர, கங்கை நதியில் நடைபெறும் பிரம்மாண்ட கங்கா ஆரத்தியையும் காணவிருக்கிறார். அதோடு, கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்களுக்கு இடையேயான “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், “பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு, மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதன் 2-வது கட்ட நிகழ்ச்சி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு, கலாச்சாரம், ஜவுளி, இரயில்வே போன்ற பிற துறைகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்நிகழ்ச்சி, இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன” என்றார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.