தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
நகரம் முதல் கிராமம் வரையிலான பலதரப்பட்ட ரசிகர்களின் இதயம் கவர்ந்த நடிகராக வலம் வந்த விஜயகாந்த்துக்கு அரசியல் ஆசை ஏற்படவே தேமுதிகவை ஆரம்பித்தார். குறுகிய காலத்தில், எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார்.
ஆனால், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டவே, சிகிச்சைக்காக வெளிநாடு சென்று திரும்பி வந்தார். ஆனாலும், பழைய நிலை திரும்பவில்லை. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை தனியார் மருத்துவமனையில் அட்மிட்டானவர், கடந்த 11 -ம் தேதி வீடு திரும்பினார்.
அவர் வீடு திரும்பிய சில மணி நேரத்திலேயே, தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என அறிவித்தார் பிரேமலதா. அதன்படி, திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் 14-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற்றது.
அப்போது, கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜய்காந்த் நியமிக்கப்பட்டார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்து ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த நொடியே, விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரேமலதா. பின்னர், பிரேமலதாவின் கரத்தை உயர்த்திப் பிடித்தார் விஜயகாந்த். விஜயகாந்த்துக்கு நிகரான அதிகாரம் பொதுச் செயலாளருக்கு உண்டாம்.
இனி, தேமுதிகவின் எதிர்காலத்தைப் பிரேமலதா முடிவு செய்வார். ஆனால், பிரேம லதாவின் எதிர்காலம்…?