வாரணாசியில் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் செல்லும் முதல் குழுவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழி அனுப்பி வைத்தார்.
நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பை கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், காசி தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும்.
தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது.
இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் 2.0 டிசம்பர் 17 ஆம் தேதி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். முதல் கட்டமாக 216 பேர் வாரணாசிக்கு ரயில் மூலம் செல்கின்றனர். அவர்களை வழி அனுப்பி வைக்கும் விழா சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மற்றும் பாஜகவினர், இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் வாரணாசி செல்லும் ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.