சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றியாக, தனியார் சட்டத்தை ஒன்றிணைப்பதற்கான சர்வதேச நிறுவனத்தின் (UNIDROIT) ஆளும் கவுன்சிலுக்கான தேர்தலில் இந்திய வேட்பாளர் உமா சேகர் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
UNIDROIT என்பது இத்தாலி நாட்டி ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு சுயாதீன அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது உலகளவில் வணிகச் சட்டத்தில் சீரான தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த அமைப்பின் ஆளும் கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தேர்தலில் அமெரிக்கா, சீனா, சௌதி அரேபியா, துருக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 32 பேர் போட்டியிட்டனர். ஆளும் குழுவில் ஒரு பதவியைப் பெறுவதற்குத் தேவையான வரம்பு 21 வாக்குகளாகும். ஆனால், முதல் சுற்றில் 59 வாக்குகளில் 45 வாக்குகளை உமா சேகர் பெற்றார்.
இதனால், அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டது. இது இந்திய வேட்பாளர் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் கணிசமான ஆணையையும் நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது. மேலும், உறுப்பு நாடுகளிடமிருந்து அவர் பெற்ற அமோக ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் மூலம் 2024 – 28 காலக்கட்டத்தில் ஆளும் குழுவில் இந்தியா உறுப்பினராக இருக்கும்.
இது ஒருபுறம் இருக்க, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவின் வேட்பாளர்கள் ஆளும் குழுவில் எந்தப் பதவியையும் பெறவில்லை. ஆகவே, உமாவின் இச்சாதனை இன்னும் குறிப்பிடத்தக்கதாகிறது. மேலும், உமா வெற்றியின் அறிவிப்பு சர்வதேச சட்ட உலகில் இந்தியாவின் நிலையை உயர்த்தி இருக்கிறது.
தவிர, ரோம் அடிப்படையிலான அமைப்பின் ஆளும் குழுவில் ஒரு இடத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்று தருணத்தை உமா சேகர் பெற்றிருக்கிறார்.