சென்னை மெட்ரோ இரயிலில், வருகிற 17-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், ரூபாய் 5 பிரத்யேகக் கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு, கடந்த 03-ஆம் தேதி க்யூஆர் பயணச்சீட்டுகளை (பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே) பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக (03.12.2023) அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத காரணத்தினால், மீண்டும் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மெட்ரோ பயணிகள் இச்சலுகையைப் பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பிரத்யேகக் கட்டணம் அன்று ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே) மட்டுமே பொருந்தும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்குப் பொருந்தாது.
பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளது.