பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தந்தை அதிபர் வேட்பாளராகவும், மகன் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆகிய முக்கியக் கட்சிகள் மோதுகின்றன.
இதில்தான், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, அதிபர் வேட்பாளராக அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதில், ஆசிப் அலி 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்த பிறகு நவாஸின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.
இந்த அமைச்சரவையில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு வரை பிலாவல் பூட்டோ வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். ஆனால், தற்போதைய தேர்தவிவ் இந்த இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.