விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.
மத்திய பா.ஜ.க. அரசால் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இது மத்திய அரசுத் திட்டங்களின் பலன்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கு வைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதின் மூலம், அரசின் முதன்மைத் திட்டங்களின் நிறைவடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், நாடு முழுவதுமுள்ள கிராமங்களுக்கு விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை வேன் செல்லும். கிராம பஞ்சாயத்துகளில் வேன் நிறுத்தப்பட்டு, சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தொடர்ந்து, மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ்னா திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் செயலியைப் பயன்படுத்தி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டு பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
மேலும், காசநோய்க்கான நோயாளிகளின் ஸ்கிரீனிங் அறிகுறிகளுக்காகவும், சளி பரிசோதனைக்காகவும், NAAT இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான தகுதியான மக்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். இதில், நோய் அறிகுறி இருப்பவர்கள் உயர் சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், விக்சித் பாரத் பயனாளிகளுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு கலந்துரையாடுகிறார். மேலும், இந்நிகழ்ச்சியின்போது, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகள் சேருவார்கள். மேலும், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.