சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான, 1,201 கிராம் எடை கொண்ட கொக்கேன் போதைப்பொருளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒரு சிலர் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம், போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இதனை கண்டறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், எத்தியோப்பியா நாட்டில் இருந்து நேற்று பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரைத் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
ஆராய்ச்சி மேல்படிப்பிற்காக வந்ததாகவும், மருத்துவ பரிசோதனைக்கு வந்ததாகவும் மாறிமாறி கூறியுள்ளார். இதையடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், அவருடைய வயிற்றுக்குள் ஏராளமான கேப்சூல் மாத்திரைகளை விழுங்கி இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனிமா கொடுத்து, வயிற்றுக்குள் இருந்த கேப்சூல்களை வெளியே எடுத்தனர். கேப்சூல்களைப் பிரித்து பார்த்ததில், அதில் கொக்கைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதைனையடுத்து ரூ.12 கோடி மதிப்பிலான, 1,200 கிராம் எடை கொண்ட கொக்கேன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பயணி நைஜீரியா நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.