ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளது.
10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது . இதன் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. 50 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் நேற்று இரண்டு அரையிறுதி போட்டி நடைபெற்றது.
முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடியன.
பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 48வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அயன் அப்சல் கான் 7 பௌண்டரீஸ் என மொத்தமாக 57 பந்துகளில் 55 ரன்களை எடுத்தார். அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்யன்ஷ் சர்மா 46 ரன்களும், ஈதன் கார்ல் டி’சோசா 37 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக உபைத் ஷா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 43வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக முருகன் பெருமாள் 62 ரன்களும், முஷீர் கான் 50 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக மருஃப் மிருதா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் அரிஃபுல் இஸ்லாம் தனி ஒரு ஆளாக நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அரிஃபுல் இஸ்லாம் 9 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 90 பந்துகளில் 94 ரன்களை எடுத்தார். அதேபோல் வங்கதேச அணியில் அஹ்ரார் அமீன் 44 ரன்களை எடுத்தார். இதனால் 43வது ஓவரில் வங்கதேச அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்நிலையில் இறுதிப்போட்டி நாளை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.