கேரளாவில் ஜனவரி 2-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரம்மாண்டக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கேரள மாநில பா.ஜ.க. சார்பில், ஸ்ரீசக்தி சங்கமம் என்கிற தலைப்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சூர் தேக்கிங்காடு மைதானத்தில் ஜனவரி 2-ம் தேதி இக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதுகுறித்து கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறுகையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு, பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக ஸ்ரீசக்தி சங்கமம் என்கிற கூட்டம் திருச்சூரில் ஜனவரி 2-ம் தேதி நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக, அங்கன்வாடி பணியாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், தொழில் முனைவோர், சமூக மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
தென் மாநிலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில்லை. இந்நிகழ்ச்சி மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கும்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருவதை முன்னிட்டு, அம்மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அதோடு, பிரதமரை வரவேற்கவும் தயாராகி வருகிறார்கள்.