கடந்த சில நாட்களுக்கு முன்னர், மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதனால், வெள்ளதால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், எருது, பசு உயிரிழப்புகளுக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும் என்றும், அதுவும் இந்தத் தொகை ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, நிவாரணத் தொகை பெறுவதற்கு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
டோக்கன் பெறுவதற்காக, காலை முதல் ரேஷன் கடை முன்பு, பொது மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்.
இந்த நிலையில், ஒரு குடும்பத்தில் யார் வருமான வரி கட்டினாலும் அக்குடும்பத்திற்குத் தமிழக அரசின் வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படாது என்று கூறி ரேஷன் கடையில் பல மணி நேரம் காத்திருந்த பலரை திருப்பி அனுப்பி வருவதால் சென்னை வாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வருமான வரி செலுத்துபவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லையா? அல்லது வருமான வரி கட்டுவது ஒரு குற்றமா எனச் சமூக ஆர்வலர்கள் தங்களது குமுறலை வெளிப்படு வருகின்றனர். வீட்டிற்கு வந்து டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரேசன் கடையில் டோக்கன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.