பெண்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். அவர்களுக்காக எங்கள் அரசு அயராது உழைக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி நாட்டின் குடிமக்களுக்குத் தெரிவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் ஒரு நாடு தழுவிய முயற்சியாக, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து தொடங்கி வைத்தார்.
இந்த யாத்திரையின் மூலம் மத்திய அரசுத் திட்டங்களின் பலன்கள் அனைத்து இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பயனாளிகளையும், குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம், அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களின் நிறைவை அடைவதே நோக்கமாகும்.
இந்த யாத்திரையின்போது, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை வேன் கிராம பஞ்சாயத்துப் பகுதிகளில் நிறுத்தப்படும். அங்கு, சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சர்க்கரை வியாதி மற்றும் உயர் இரத்த அழுத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், மேற்கண்ட வியாதிகளுக்கான அறிகுறி இருப்பவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அந்த வகையில், இந்த யாத்திரையின் மூலம் நவம்பர் 26-ம் தேதி நிலவரப்படி, 995 கிராம பஞ்சாயத்துகளில் 5,470 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த முகாம்கள் மூலம் மொத்தம் 7.82 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயனடைந்திருப்பதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, பயனாளிகளின் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் மோடி, அவர்களுக்கு என்னென்ன திட்டங்கள் பயனளித்தன என்பது குறித்தும் விவாதித்தார்.
மேலும், மத்திய அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டதா என்றும் கேட்டறிந்தார். அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியைச் சேர்ந்த கல்யாணி ராஜ்போங்ஷி என்ற பயனாளியிடம் பிரதமர் மோடி பேசியபோது, அவர் எப்படி ஒரு சுய உதவிக் குழுவை உருவாக்கினார் என்பதையும், மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவது பற்றியும் விளக்கினார்.
தவிர, இதற்கு மத்திய அரசின் கடன்கள் தனக்கு உதவியாக இருந்ததாக பிரதமர் மோடியிடம் கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, “மற்ற பெண்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளீர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு பெண்ணுக்கு அதிகாரமளிப்பது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்” என்றார்.
அதேபோல, ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த குஷாலா தேவி என்ற மற்றொரு பயனாளியிடம் பிரதமர் மோடி பேசியபோது, தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன்களை பெற்றதாகக் கூறினார். இதற்கு பிரதமர் மோடி, “நாட்டு பெண்களுடன் அரசு நிற்கிறது. உங்களைப் போன்றவர்கள் எங்களை கடினமாக உழைக்க தூண்டுகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “ஒரே மாதத்தில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் 1,500 நகரங்களை சென்றடைந்திருக்கிறது. வளர்ந்த இந்தியா என்ற உறுதியுடன் ‘மோடியின் உத்தரவாத வாகனம்’ நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைகிறது.
பெண்கள் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக எங்கள் அரசு அயராது உழைக்கிறது. இந்த யாத்திரையை ஊக்குவிக்குமாறு மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதில் பா.ஜ.க. அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இந்த யாத்திரை 140 கோடி மக்களின் நலனுக்கானது” என்றார். தொடர்ந்து, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.