ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயின் என்ற சரக்கு கப்பல் இன்று அரபிக்கடலில் சென்று கொண்டிருந்தபோது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. மால்டோவா நாட்டின் கப்பலை மீட்க இந்திய கடற்படை களமிறங்கியுள்ளது.
ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயின் என்ற சரக்கு கப்பல் 18 பணியாளர்களுடன் இன்று காலை சோமாலியா நோக்கி சென்று கொண்டிருந்தது.
அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, சரக்கு கப்பலில் கடற்கொள்ளையர்கள் ஏறி உள்ளனர். கப்பலில் இருந்த 18 பேரையும் கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்து, கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, கப்பல் கேப்டன் உதவி கோரி இந்திய கடற்படைக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதைத் தொடர்ந்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்பகுதியில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 18 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் இன்று ஆபத்திற்கான தகவலை அனுப்பியது. கப்பலில் அடையாளம் தெரியாத 6 நபர்கள் ஏறியதாக தகவல் வந்தது. இதனை அடுத்து இந்திய கடற்படை அதன் ரோந்து விமானத்தை அங்கே அனுப்பி உள்ளது. தற்போது, அங்கே நிலவி வரும் சூழலை இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த கடற்பரப்பில் ஏதாவது பிரச்சினை என்றால், முதலில் பதில் அளிப்பது இந்திய கடற்படைதான். இந்த கடற்பரப்பில் வணிக கப்பல் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.