பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப். இவரது தலைமையிலான அரசின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதியே அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அன்வர் உல் ஹக் காகர் என்பவர் இடைக்கால பிரதமராக இருந்து வருகிறார். எனினும், பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே சென்றது. இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரி 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
ஆனால், அன்றையதினம் இரவு அந்நாட்டின் அதிபரை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர், பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இதனால், தேர்தல் எந்த தேதியில் நடைபெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்தார். இவர்களில் பலர் அதிகாரவர்க்கத்தினர் என்பதால், லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் நியமனத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனால், தேர்தல் தேதியை அறிவிப்பதில் குழப்பம் நிலவியது. இந்த சூழலில், லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதேசமயம், பாகிஸ்தானில் கடந்த தேர்தலில் 342 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அது தற்போது தொகுதி மறுவரையறையின் படி 6 இடங்கள் குறைக்கப்பட்டு 336 இடங்களாக உள்ளன. இதில், 60 தொகுதிகள் பெண்களுக்கான ரிசர்வ் தொகுதியாகும். முஸ்லீம் இல்லாத வேட்பாளருக்காக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.