குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்களில், போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்ற சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக, 10 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராமக்களைப் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
குஜராத்தில் விஸ்வாஸ் திட்டம் இரண்டின் கீழ், 52 நகராட்சிகள் மற்றும் வதோதரா, சூரத் போன்ற பெரிய நகரங்களில் 10 ஆயிரத்து 500 சிசிடிவி கேமராக்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஸ்வாஸ் திட்டப் பணிக்குழு மற்றும் ஏடிஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஸ்வாஸ் திட்டம்-2 செயல்படுத்தல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
குஜராத்தை ஒட்டிய இராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள 80 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், அவற்றை இரவும் பகலும் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ், வதோதரா, சூரத் மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நான்கு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்கள், மார்கெட்டுகள், மாநிலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்படும்.
இந்த இடங்களில், வாகனங்களின் பதிவு எண் தகடுகளைப் படிக்கும், சந்தேகத்திற்கிடமான செயல்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இ-சலான் வழங்கும் திறன் கொண்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் 7 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 7 ஆயிரத்து 300 வழக்குகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருந்தது