கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சுற்றுலாத்தலமான விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோதையாறு, பரளியாறு, குழித்துறை ஆகிய ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் நிரஞ்சன் மார்டி அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. இதனையடுத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 100 பேர் அடங்கிய 4 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.