மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில், மேற்கண்ட 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. மேலும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்ததோடு, அத்தியாவசியப் பொருட்களும் வீணாகிப் போயின.
அதேபோல, கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து டோக்கன் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், 6,000 ரூபாய் இழப்பீடு போதாது என்றும், 12,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்தார்.
அமைப்புச் செயலாளர் பாரத மாதா செந்தில், தென் சென்னை தலைவர் சீனிவாசன் உட்பட 4 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், புயல் நிவாரணமாக 12,000 ரூபாய் வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அர்ஜூன் சம்பத், “புயல் வெள்ளத்தில் சேதமடைந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பதிலாக, அரசு சார்பில் இலவசமாக புதிய பொருட்கள் வழங்க வேண்டும். வாகனங்கள் சேதமடைந்ததால், அவற்றை இலவசமாக பழுது நீக்கித் தருவதோடு, இ.எம்.ஐ. தவணையை வங்கிகள் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
மேலும், சேதமடைந்த உணவுப் பொருட்களுக்கு ஈடாக அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்யும் வகையில், அந்நிறுவனங்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், சரியான திட்டமிடல் வேண்டும்” என்றார்.